Aug 31, 2011

பசுமை வழியில் இறுதிக் கிரியை செய்ய புதிய வழிமுறை


இறந்தவர்களின் உடலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அழிக்க புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இறுதிக் கிரியை செய்வதற்கான ஒரு இடத்தில் 'அல்கலைன் ஹைட்ராலிஸிஸ்' எனப்படும் புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
காரத்தன்மை கொண்ட இரசாயன திரவத்தில் தசைகள் கரைகின்றன

இந்த முறையின் கீழ் தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடும் கலந்த திரவத்தில் உடல் முழ்கடிக்கப்பட்டும்

திரவ அழுத்தம் 10 அட்மாஸ்பியர் என்ற அளவுக்கு உயர்த்தப்படும்.

பின்னர் இந்த திரவம் இரண்டரை மணி முதல் மூன்று மணி நேரத்துக்கு 180 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சூடாக்கப்படும்.

இப்படிச் செய்யும்போது உடல் தசைகள் அனைத்தும் கரைந்து போய்விடுகிறது.

தசைகள் கரைந்துபோன இந்த திரவம் நகரின் கழிவு நீர் வடிகாலில் கொட்டப்பட்டுவிடும்.

இதனால் பொது சுகாதாரத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது என்று இந்த புதிய வழிமுறையை உருவாக்கிய சேண்டி சல்லிவன் தெரிவித்துள்ளார்.

கரையாமல் இருக்கின்ற எலும்புகள் பின்னர் மின்சார தகனக் கருவியான 'கிரிமுலேட்டர்' என்ற இயந்திரத்தில் வைத்து உடைக்கப்பட்டு சாம்பலாக்கப்படும்.

உடலில் செயற்கை மூட்டு, செயற்கைப் பல் போன்ற உலோகப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டிருந்தால் அவை பாதுகாப்பாக பிரித்து எடுக்கப்படும்.

இந்த புதிய இயந்திரத்தை பயன்படுத்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்திலும் இந்த புதிய முறையை பயன்படுத்த தேவையான சட்டத் திருத்தங்கள் செய்யப்படுமென சல்லிவன் நம்புகிறார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வழிமுறை

இது பசுமையான முறை என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை, சடலங்களை எரியூட்டுவதால் மட்டும் காற்றில் பாதரசத்தின் அளவில் 16 சதவீத மாற்றம் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சனையை சமாளிக்க பல எரியூட்டு நிலையங்களில் பாதரசத்தை வெளிவிடாமல் தடுக்கும் வடிகட்டிகள் அதிக செலவு செய்து பொருத்தப்படுகின்றன.

இந்த புதிய முறையால் செலவு குறைவதோடு, உடல் எரிக்கப்படும்போது வெளியாகும் வெப்ப வாயுக்களின் அளவும் மூன்றில் ஒரு பங்கு குறையும்.

எரிசக்தி பயன்பாடும் கிட்டத்தட்ட 85 சதவீதம் குறைகிறது.

Related Posts

பசுமை வழியில் இறுதிக் கிரியை செய்ய புதிய வழிமுறை
4/ 5
Oleh
>