Jun 18, 2011

மனிதர்கள் பிறவிப் பொய்யர்கள் !


மூன்று வயதில் குழந்தை பொய் சொல்கிறதா?- சந்தோஷப்படுங்கள்.

ஏழு வயதில் குழந்தை பொய் சொல்கிறதா?- பயப்படுங்கள்.

ஆனால், அதற்காக அதிகம் கவலைப்படாதீர்கள்.

பொய்தான் நம்மை மனிதனாக்குகிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா?

இயன் லெஸ்லி என்பவர் `பிறவிப் பொய்யர்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில், மனிதர்கள் அனைவரும் பிறவிப் பொய்யர்களே என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் இரண்டிலிருந்து நான்கு வயதுக்குள்ளாகவே பொய் சொல்லக் கற்றுக்கொண்டு விடுகின்றனர் என்பது ஆச்சரியமான தகவல்தான்.

ஆரம்ப காலங்களில் ஏதாவது குறும்பு செய்துவிட்டு, அதற்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர். பின்னர் சில நாட்களிலேயே மிக திறமையாக பொய் சொல்வது எப்படி என்பதை மிகவும் ஆர்வமாக கற்று கொள்கின்றனர்.

சிறு வயதில் பொய் சொல்வது கடினம்தான் என்றாலும், எது சரி? எது தவறு? என்பதை எல்லாம் அடையாளம் கண்டு இரண்டையும் கலந்து தேவைக்கேற்ப கோர்வையாக பொய் சொல்வதை 3 லிருந்து 4 வயதுக்குள் கற்று கொள்கிறார்களாம்.

தாங்கள் சொல்லும் பொய்களை கேட்பவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். இந்த சின்ன வயதில் இது ஒரு அபாரமான திறமைதான்.

`உங்கள் குழந்தை சொல்லும் பொய்யைக் கண்டுபிடித்து விட்டீர்களா? உள்ளுக்குள் ரசித்துக் கொள்ளுங்கள்; பாராட்டி விடாதீர்கள்’ என்கிறார் இயன் லெஸ்லி.

பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக்கும், தாம் விரும்புவதை பெறுவதற்காகவும் `பொய்’ என்ற ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் பள்ளிக்குச் சென்று படிக்கத்தொடங்கியதும் பொய் சொல்லும் பழக்கத்தை விட்டு விடுகின்றார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

பொய் சொல்லி மாட்டிக்கொண்டால், ஆசிரியர்களிடமும் மற்ற குழந்தைகளிடமும் தங்களது மதிப்புக் கெட்டுவிடும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் 7 வயதுக்குள் இந்த பழக்கத்தை கை விடாதவர்கள் வாழ்நாள் பொய்யர்களாகி விடுவதும் உண்டு. எனவே உங்கள் குழந்தை பொய் சொல்கிறதா என்பதை கவனியுங்கள்.

தற்காப்புக்கான பொய் தப்பில்லை, ஆனால் இது குழந்தைகளுக்கு மட்டும்தான்.




Related Posts

மனிதர்கள் பிறவிப் பொய்யர்கள் !
4/ 5
Oleh